அகமுடையார்களெல்லாம் பசும்பொன்னுக்கு செல்லுங்கள்; செல்லாமல் இருங்கள்; அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், "திருப்பத்தூருக்கும் - காளையார் கோவிலுக்கும் ஸ்டாலின் வரவில்லை, ஓ.பி.எஸ் - ஈ.பி.எஸ் வரவில்லை, திமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; அதிமுகவின் முக்கிய தலைவர்கள் வரவில்லை; முதல்வரோ, எதிர்க்கட்சித்தலைவரோ, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களோ, யாரும் வரவில்லை; ஆனால் பசும்பொன்னுக்கு மட்டும் இவர்கள் செல்கிறார்கள்; திட்டமிட்டே அகமுடையார்களை அனைத்து அரசியல் கட்சிகளும் புறக்கணிக்கின்றன." என்பது போன்ற விமர்சனங்களை தவிருங்கள்.

இன்னும் சொல்லப்போனால் இப்படியான விமர்சனங்கள் தேவையே இல்லை. அப்படி விமர்சித்தே ஆக வேண்டுமென நீங்கள் விரும்பினால், அக்டோபர் 24ம் தேதி திருப்பத்தூருக்கு வராத, அக்டோபர் 27ம் தேதி காளையார்கோவிலுக்கு வராத அகமுடையார்களை முதலில் விமர்சியுங்கள். குறிப்பாக திருப்பத்தூருக்கும், காளையார்கோவிலுக்கும் வராமல், அக்டோபர் 30ஆம் தேதி மட்டும் பசும்பொன் செல்லும் அகமுடையார்களை விமர்சியுங்கள். இந்த விசயத்தில் முதலில் விமர்சிக்கப்பட வேண்டியவர்கள் அரசியல் கட்சி தலைவர்களல்ல; அவர்களை நாம் விமர்சிக்க வேண்டிய தேவையுமில்லை. அவர்கள் ஓட்டுரசியல் செய்யும் தலைவர்கள். அவர்களின் பார்வையில், கள்ளர் - மறவர் - அகமுடையர் என்ற 'சோ கால்டு' முக்குலத்தோர் போற்றும் முத்துராமலிங்கத் தேவரின் பிறந்தநாளில் அக்டோபர் 30ம் தேதி பசும்பொன் சென்று வந்தால், நமக்கும் அவர்களது ஆதரவு கிடைக்கும்; ஓட்டுரசியலுக்கு இந்த வாக்கு வங்கி தேர்தல் நேரங்களில் தங்களுக்கு பயன்படுமென்ற நம்பிக்கையில் தான் வருகின்றனர். அப்படியான அரசியல் கணக்கீடுகளோடு பசும்பொன் வருபவர்களை விமர்சிப்பது வீண்.

போலியான முக்குலத்தோர் அரசியலை நம்பி விலாங்கு மீன் போல, 'அகமுடையார் ஒற்றுமை - முக்குலத்தோர் ஒற்றுமை' என இரட்டை குதிரையில் சவாரி செய்யும் அகமுடையார்களிடம் முதலில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். மக்கள்தொகை எண்ணிக்கையிலும், விகிதிச்சார அடிப்படையிலும், அகமுடையாருக்கு கிடைத்திருக்க வேண்டிய அரசியல் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவே இல்லை என்பதை தெளிவு படுத்துங்கள். அகமுடையாருக்கான தொகுதிகளை, பதவிகளை, கள்ளரும் - மறவரும் 'சோ கால்டு' முக்குலத்தோர் என்ற முகமூடிகளால் ஆக்கிரமித்து கொள்கின்றனர் என்ற உண்மையை உணர்த்துங்கள்.

அக்டோபர் 24ல் திருப்பத்தூருக்கோ, அக்டோபர் 27ல் காளையார் கோவிலுக்கோ, எத்தனை கள்ளர் / மறவர் வந்து போகிறார்கள்? வரவே இல்லையென்றும் சொல்ல முடியாது; ஆனால் பசும்பொன்னுக்கு செல்பவர்களில் எத்தனை சதவீதம் பேர் காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வந்தார்கள் என்று கணக்கிட்டுப் பாருங்கள். அமைப்பு சார்ந்தோ, தங்களது தலைவர்களுக்காகவோ ஒருவேளை அவர்கள் வந்திருக்கலாம். தனித்து, கள்ளரும் மறவரும் காளையார்கோவில் / திருப்பத்தூர் வந்திருப்பார்களா என்றால், மிக சொற்பமான எண்ணிக்கையில் வந்து இருக்கலாம். ஆனால் அகமுடையார்களின் நிலைப்பாடோ வேறொன்றாக இருக்கிறது. தொடர்ச்சியாக திருப்பத்தூருக்கோ, காளையார்கோவிலுக்கோ வருகிறார்களோ இல்லையோ, ஆனால் பசும்பொன்னுக்கு அகமுடையார்கள் செல்கின்றனர். இந்த விசயத்தில் மனமாற்றம் ஏற்படாத வரை, வெளியிலிருந்து ஒரு மாற்றம் ஏற்பட போவதே இல்லை.

அகமுடையார்கள் பசும்பொன்னுக்கு போவதோ, போகாமலிருப்பதோ அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், காளையார்கோவிலுக்கும், திருப்பத்தூருக்கும் வரவே மாட்டேன்; ஆனால் பசும்பொன்னுக்கு கண்டிப்பாக செல்வேனென இப்படியான எண்ணவோட்டத்தில் இருக்கும் அகமுடையார்கள் மாறாதவரை, ஹிந்திய தேசிய / திராவிட / தமிழ்தேசிய அரசியல் கட்சிகளின் அரசியல் பார்வையும் மாறாது. அவர்களை விமர்சிக்கும் முன், இதுமாதிரி நமக்குள்ளேயே உள்ள முரண்களை கலைந்து, குறைகளை சரிசெய்ய நாம்தான் முன்வர வேண்டும். அப்போது தான், அகமுடையாருக்கான அரசியல் அங்கீகாரம் முழுமையாக கிடைக்க வாய்ப்புகளும் உருவாகும்.

அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு!

1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக,  கரந்தை திரு. உமாமகேசுவர பிள்ளை, பட்டுக்கோட்டை திரு. நாடிமுத்து பிள்ளை, திருத்துறைப்பூண்டி திரு. ராஜகோபால் பிள்ளை, நாகப்பட்டினம்-அந்தணப்பேட்டை திரு. திருஞானசம்பந்த பிள்ளை ஆகிய நால்வரும் முக்கிய பங்கு வகித்தனர்.

பிறகு, அகமுடையார் சங்க மாநில மாநாடு 1929ல் பட்டுக்கோட்டையிலும், 1931ல் மதுரையிலும், 1932ல் இராமநாதபுரத்திலும் நடந்தது.

அனைத்து மாநாட்டிலும் அந்தெந்த பகுதியை சார்ந்த பொதுவானதொரு சிறப்பு விருந்தினரை அழைப்பது வழக்கமாக்கி கொண்டிருந்ததால், இந்த நான்காவது மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக சேதுபதி மன்னர் வகையினரான, நீதிக்கட்சி அமைச்சரான திரு. சண்முகராஜ நாகநாத சேதுபதி கலந்து கொண்டார். அப்போது மாநாட்டில் சேதுபதி வைத்த கோரிக்கையை ஏற்று பின்னால் திரு. சிவனாண்டி சேர்வையின் முன்னெடுப்பால் அகமுடையார் மாநில சங்கமானது, முக்குலத்தோர் சங்கமாக பெயர் மாற்றம் பெற்றது.

டிசம்பர் மாதம் 1933 ல் நடைபெற்ற சென்னை மாநாட்டில், மாநில அகமுடையார் சங்கமானது, முக்குலத்தோர் சங்கமென முழுமையாக உருமாற்றம் பெற்றது. அந்த மாநாட்டின் பெயரானது மூவேந்தர் குல மாநாடு என பெயர் சூட்டப்பட்டிருந்தது.

இன்றைக்கு பவளவிழா கண்டு இயங்கி வரும் தமிழ்நாடு முக்குலத்தோர் சங்கத்திற்கான விதையானது, 1926 ல் உருவாக்கப்பட்ட மாநில அகமுடையார் சங்கத்திடமிருந்து கிடைத்தது என்பது தான் மறுக்க முடியாத, மறக்கடிக்கப்பட்ட வரலாறு. இந்த விருட்சத்தின் பலனான நிழலானது, விதைக்கும் - வேர்க்கும்  கிடைக்கவே இல்லை என்பதுதான் வருத்தமான விசயம்.





ஆற்காடு இராமசாமி முதலியார்:

ஆற்காடு இலட்சுமணசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். சட்டப்படிப்பு முடிந்தபின், அரசியலில் ஈடுபடுவதற்கு முன்பு வழக்குரைஞராகப் பணியாற்றினார். நீதிக்கட்சி ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே (1917) கட்சியில் இருந்தவர்; நீதிக்கட்சியின் பொதுச்செயலாளராகவும் பொறுப்பு வகித்தார். இவர் நீதிக்கட்சியில் படிப்படியாக முன்னேறி அக்கட்சியின் மூளையென்று கருதப்படும் அளவுக்கு உயர்ந்தார். 1920 லிருந்து 1934 வரை தொடர்ச்சியாக சென்னை சட்ட மன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இங்கிலாந்து சென்று நீதிக்கட்சி சார்பில் வகுப்புவாரியான பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி அதற்கான சான்றுகளைப் பிரித்தானிய நாடாளுமன்றச் சீர்திருத்தச் செயற்குழு முன் சமர்ப்பித்தார். இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளிலும் உள்ள பிராமணர் அல்லாதோரை ஒன்றிணைக்கவும் அவர்களையும் உள்ளடக்கி மாநாடுகளை நடத்தவும் முயற்சிகள் மேற்கொண்டார். சென்னை மாநகரத்தின் தலைவராய் பொறுப்பேற்றவுடன், மாநகராட்சிப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தைக் கொண்டுவந்தார். ஐதராபாத் பிரச்சினையைக் கையாள அன்றைய உள்துறை அமைச்சர் பட்டேல் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஸ்விட்சர்லாந்து சென்று அங்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் இந்தியாவின் சார்பில் வாதாடி ஐதராபாத் நகரத்தை இந்தியாவுடன் இணைத்த பெருமை இவருடையதே. பிறகு மத்திய அரசால் பல உயர்பதவிகள் அளிக்கப்பட்டு சிறந்த பணி ஆற்றினார். பல வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளித்து பெருமைப்படுத்தின. மேலும், இந்திய அரசு சார்பில் பத்மவிபூஷன் பட்டம் அளிக்கப்பட்டது.


ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார்:


ஆற்காடு இராமசாமி முதலியாரும் இவரும் இரட்டையர்கள். இவர் 1983 ஆண்டு எழுதிய மகப்பேறு மருத்துவப் புத்தகம் இன்றளவும் இந்திய மருத்துவ மாணவர்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. இவரே மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் நீண்டகாலம் துணைவேந்தராகவும் (27 ஆண்டுகள்) மெட்ராஸ் மருத்துவக்கல்லூரியில் முதல்வராகவும் பணியாற்றியவர். உலக சுகாதார மையத்தின் செயற்குழுத் தலைவராக இவர் 1949 மற்றும் 1950 ஆம் ஆண்டுகளில் செயல்பட்டார். எட்டாவது உலக சுகாதாரக் கூடுகையின் துணைத் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் 14 ஆவது உலக சுகாதாரக் கூடுகையின் தலைவராக 1955 ஆம் ஆண்டிலும் செயற்பட்டார். இந்திய அரசு இவருக்கு, 1963 ஆம் ஆண்டு பத்ம விபூஷண் விருது வழங்கிச் சிறப்பித்துள்ளது. இலட்சுமணசாமி முதலியார் சிறந்த கட்டிடக் கலை நிபுணரும் ஆவார். சென்னை சேத்துப்பட்டில் இருக்கும் பச்சையப்பன் கல்லூரி, சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபம், அங்குள்ள பட்டமளிப்பு மண்டபம் (இப்போது தொலைதூரக் கல்வி இயக்கமும், பல பெரிய அரசு விழாக்களும் அங்கு நடத்தப்படுகிறது.) ஆகியவைகள் இவரால் கட்டப்பெற்றன.

சென்னை தரமணியில் இயங்கிவரும் ஐ.ஐ.டி. நிறுவனமும் இலட்சுமணசாமி முதலியார் முயற்சியால் கொண்டுவரப்பட்டு இன்றும் உலகளாவிய புகழ்பெற்று வருகிறது. அந்நிறு வனத்தில் இலட்சுமணசாமி முதலியாரின் வெண்கல சிலை நிறுவப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. மேலும், அகில இந்திய பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு இந்தியில் எழுதப்பட வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து, ஆங்கிலத்தில் தென்னிந்திய மக்கள் எழுதும் வாய்ப்பைப் பெற்றுத் தந்தவர் இவர்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கிச் சிறப்பித்த பெருமைக்குரியவர்களான வழக்குரைஞர் சர் ஆற்காடு இராமசாமி முதலியார் மற்றும் மருத்துவர் சர் ஆற்காடு இலட்சுமணசாமி முதலியார் என்ற ஆற்காடு இரட்டையர்களுக்கு 130 வது பிறந்த நாளில் புகழ் வணக்கம்!