'தமிழவேள்' வே.உமாமகேசுவரன் பிள்ளை! (07.05.1883 - 09.05.1941)


1883ம் ஆண்டில் தஞ்சாவூர் மாவட்டத்தில் "கருந்திட்டைக்குடி" எனும் கரந்தை கிராமத்தில், வேம்பப்பிள்ளை - காமாட்சி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார்.

அன்றைய காலக்கட்டங்களிலேயே சட்டம் படித்து, இலவசமாக வழக்குரைஞர் பணியையும் திறன்பட சேவை செய்தவர்.

1911ம் ஆண்டு மே 14ஆம் நாள் கரந்தைத் தமிழ்ச் சங்கத்தை நிறுவி அதன் தலைவராக வே.உமாமகேசுவரன் பிள்ளை பொறுப்பேற்றார்.

கட்டணமில்லாப் படிப்பகம் ஒன்றையும் தொடங்கினார். யாழ்நூல், நக்கீரர், கபிலர், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் பதிப்பித்தார்.

பல்லாயிர கணக்கான நூல்களை விலை கொடுத்து வாங்கி, அவற்றையெல்லாம் தமிழாய்வுக்காக தனி நூலகத்தை உருவாக்கியவர்.

1915ம் ஆண்டில் "தமிழ்ப்பொழில்" என்னும் மாத இதழை தொடங்கி, தமிழ்ச் சங்கத்தின் சார்பில், பல அரிய நூல்களை வெளியிட்டார்.

1919ம் ஆண்டிலேயே தமிழ் மொழியினைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டும் என்று முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.

ஸ்ரீமான், ஸ்ரீமதி, விவாகம் என்ற வட சொற்களுக்குப் பதில் திருமகன், திருவாட்டி, செல்வன், செல்வி, திருமண விழா என்னும் சொற்களை முதன்முதலில் கையாண்டார்.

பத்திராதிபர், சந்தா, விலாசம், வி.பி.பி. என்பனவற்றுக்கும் பதிலாக பொழிற்றொண்டர், கையொப்பத் தொகை, உறையுள், விலை கொளும் அஞ்சல் போன்ற அருஞ்சொற்களைத் தமிழுக்குத் தந்தார்.

1922 ஆம் ஆண்டிலேயே தமிழுக்கென தனியே ”தமிழ்ப் பல்கலைக் கழகம்” வேண்டும் என்று முதன் முதலாகத் தீர்மானம் நிறைவேற்றினார்.

வடமொழி மட்டுமே கற்பிக்கப் பட்டு வந்த திருவையாற்று கல்லூரியில் தமிழையும் கற்பிக்கச்செய்து, அக்கல்லூரியின் பெயரை அரசர் கல்லூரியாக மாற்றினார்.

நீராருங் கடலுடுத்த எனத் தொடங்கும் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களின் பாடலைத் ”தமிழ்த் தாய் வாழ்த்து” பாடலாக தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தினார்.

1928 ல் கரந்தை தமிழ் சங்கத்தின் சார்பில் கட்டணம் இல்லா மருத்துவமனையை தொடங்கினார்.

1937ம் ஆண்டில் இந்தி மொழியைக் கட்டாயப் பாடமாக்கியபோது, அதனை எதிர்த்து முதல் குரல் கொடுத்தும், தீர்மானம் இயற்றியும் களத்தில் இறங்கிப் போராடினார்.

"வான வரிவைக் காணும்போ தெல்லாம் உமாமகேசுரன் புகழே என் நினைவில்வரும்" என பாரதிதாசனால் புகழப்பட்டவர்.

பார்பனர் மட்டுமே ஆதிக்கம் செலுத்திய அரசியலில், பார்பனரில்லாத கட்சியான ”நீதிக்கட்சி” தொடங்க காரணகர்த்தர்களில் ஒருவராக இருந்தார்.

இவர் தஞ்சை ஜில்லா போர்டு தலைவராய் இருந்த காலத்தில் தொடக்க பள்ளிகள் நாற்பதாய் இருந்தது எண்ணிக்கையை நூற்றி எழுபதாக உயர்ந்தது தஞ்சையில் பல தீவு கிராமங்களை இணைக்க இவர் கட்டிய பாலங்கள் இன்றுவரை பயன் பாட்டில் உள்ளன.

அனைத்து தமிழர்களுக்கும், தமிழுக்கும் செய்த தொண்டை போலவே, முற்பட்டோர் பட்டியலில் இருந்த அகமுடையாரை, பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இணைத்து பல சலுகைகளை இந்த இட ஒதுக்கீட்டின் மூலம் பெற காரணமாய் இருந்த எங்கள் முன்னோடி 'தமிழவேள்' வே.உமாமகேசுவர பிள்ளைக்கு எம் புகழ் வணக்கம்!